Gold: தங்கம் விலை என்னதான் அதிகரித்தாலும், அதன் மீதான ஆர்வம் மட்டும் இந்தியர்களுக்கு குறைந்தபாடாக இல்லை. குறிப்பாக தமிழர்களுக்கு. தொடர்ந்து விலையேற்றம் கண்டு வந்தாலும், இன்றும் நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டமே அதற்கு முக்கிய சாட்சி. என்ன தான் விலை அதிகரிக்கட்டும், நான் வாங்குவதை வாங்கிக் கொண்டு தான் இருப்பேன் என்பது தான் நம்மவர்களின் எண்ணமாக உள்ளது.
கடத்தல் அதிகரிப்பு?
தங்கம் விலை அதிகரிக்க அதிகரிக்க, மறுபுறம் தங்க கடத்தலும் அதிகரித்து வருகிறது. அதையும் சமூகத்தில் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் பிரபலங்கள் செய்வது தான் வருத்தமே. சமீபத்தில் கன்னடா மற்றும் தமிழ் படங்களில் நடித்த நடிகை ஒருவர், 14.8 கிலோ தங்கத்தை, துபாயில் இருந்து எடுத்து வந்ததாக சர்ச்சை வெடுத்தது. அதன் இன்றைய மதிப்பு ரூ.10 கோடிக்கும் மேல். பெங்களூரிவில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது இப்படி எனில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கேரள முதலமைச்சரே கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் முதலமைச்சரின் முதன்மை செயலாளரும் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்பட்டதையடுத்து, அவர் தனது பதவியையே ராஜினாமா செய்ததும் குறிப்பிடத்தக்கது. இது மட்டும் அல்ல, அனுதினமும் ஏதேனும் ஒரு வகையில் தங்க கடத்தல் என்பது அதிகரித்த வண்ணமே இருந்து வருகிறது. இன்னும் சிலர் வெளி நாடுகளில் இருந்து குறைந்த விலையில் வாங்கி வரலாம் என நினைத்து, எவ்வளவு கொண்டு வரலாம் என்பது தெரியாமல் கடைசியில் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
ஏன் விலை அதிகம்?
சர்வதேச சந்தையில் உயர்ந்து வரும் தங்கம் விலையுடன், இந்தியாவின் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பலவற்றையும் சேர்க்கும்போது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது விலை அதிகம் தான். இதனால் தான் வெளி நாடுகளுக்கு பணிக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள், வணிக ரீதியாக செல்பவர்கள் என பலரும் அங்கிருந்து தங்கம் வாங்கி வருகின்றனர். சில நாடுகளில் தங்கத்திற்கு வரி குறைவு, சிலவற்றில் வரி கிடையாது என்பதால் அங்கு விலை மலிவாக கிடைக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் தாங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வரும்போது சம்பாதித்த தொகையை தங்கமாக வாங்கி வருகின்றனர். ஆனால் இவ்வளவு தான் வாங்கி வர வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மறந்து விடுகின்றனர். கடைசியில் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.
எவ்வளவு கொண்டு வரலாம்?
பொதுவாக வெளி நாடுகளில் இருந்து ஒரு ஆண் 20 கிராம் தங்கத்தை கொண்டு வரலாம். அதுவே பெண்ணாக இருந்தால் 40 கிராம் தங்கம் கொண்டு வரலாம். அதற்கு சுங்க வரி இல்லை. இதே 15 வயதிற்குற்பட்ட குழந்தைகளும் 40 கிராம் தங்கம் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். எனினும் இதற்கு உறவு முறை சான்று அளிக்க வேண்டும்.
சரிங்க எனக்கு 40 கிராமுக்கு மேல் வேண்டும். 20 கிராமுக்கு மேல் தங்கம் கொண்டு வர வேண்டும் என்றால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழும். இந்திய பாஸ்போர்ட் உள்ள ஒரு நபர் 6 மாதத்திற்கு மேல், வெளி நாடுகளில் இருப்பவர்கள், 1 கிலோ வரையில் கூட கொண்டு வரலாம். ஆனால் அதற்கு சரியான வரி செலுத்தி கொண்டு வர வேண்டும். அது நகையாகவோ அல்லது காயின், பார் என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆக நீங்கள் எந்த சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.