Gold:தங்கம் விலையானது வரலாற்று உச்சத்தை எட்டி இருக்கிறதே. இது எப்படி குட் நியூஸ் ஆக இருக்க முடியும் என பலருக்கும் கேள்வி எழலாம். தற்போதைய சூழலில் தங்கம் விலையானது உச்சத்தை தொட்டிருந்தாலும், அது குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்திருப்பது நல்ல விஷயம் தானே.
சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், தங்கம் விலையானது அவ்வப்போது உச்சத்தை எட்டி வருகிறது. தொடர்ந்து தங்கத்தின் தேவையை அதிகரித்து வருகிறது. இந்த போக்கு மாறவே மாறாதா, விலை குறைவே குறையாதா என்ற எதிர்பார்ப்பானது இருந்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் வட்டி விகிதம் குறித்த முடிவானது, சாமானியர்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளது.
புதிய உச்சம்!
எப்படி இருப்பினும் தற்போதைய சூழலில் எம்சிஎக்ஸ் கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது 10 கிராமுக்கு 88,852 ரூபாய் என்ற லெவலுக்கு மேலாக உச்சத்தை தொட்டுள்ளது. இது அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில், பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளதைக் காட்டுகிறது. சர்வதேச சந்தையிலும் அவுன்ஸூக்கு தொடர்ந்து 3,000 டாலர்களுக்கு மேலாக காணப்படுகிறது. நடப்பு ஆண்டில் இதுவரையில் மட்டும் 14%-க்கும் அதிகமான ஏற்றம் கண்டுள்ளது. நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில் நடப்பு ஆண்டில் மஞ்சள் உலோகம் 14 முறை வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. டிரம்பின் வரி அதிகரிப்பு நடவடிக்கைகள், புவிசார் அரசியல் பதற்றங்கள்,பொருளாதார வளர்ச்சி குறித்த கவலை, டாலர் மதிப்பு சரிவு எனப் பல்வேறு காரணிகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
அடிப்படை மாறவில்லை
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி குறைப்பு நடவடிக்கை, இனி வரும் கூட்டங்களில் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்கம் விலை குறையலாமோ என்ற பலத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மார்ச் 19 கூட்டத்தில் தற்போதுள்ள 4.25 – 4.50% விகிதம் அப்படியே தொடரும் என கூறியுள்ள மத்திய வங்கியின் முடிவானது, அடுத்து வரவிருக்கும் கூட்டங்களில் குறைய வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டை குறைக்க வழிவகுக்கலாம். எப்படி இருப்பினும் இது ஒரு குறுகிய கால குறைந்த விகிதத்தில் இருக்கவே காரணமாக இருக்கலாம். ஏனெனில் நீண்ட அடிப்படை காரணிகள் எதுவும் மாறவில்லை. குறிப்பாக இஸ்ரேல் காசா பிரச்சனை முடிவுக்கு வந்த பாடாக இல்லை. உக்ரைன் ரஷ்யா பிரச்சனை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்தாலும், நீண்ட காலத்தில் எப்படி இருக்குமோ என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது. எல்லாவற்றுக்கும் மேல் மத்திய வங்கியின் முடிவால் டாலரின் மதிப்பு பலவீனமடைந்தால், அது டாலரில் தங்கத்தை வாங்குபவர்களையும் ஊக்குவிக்கலாம். மொத்தத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழல்களுக்கு மத்தியில் சிறந்த ஹெட்ஜிங் ஆக தங்கம் பார்க்கப்படலாம்.
இந்திய நிலவரம்!
இந்திய சந்தையை பொறுத்த வரையில் பெரிய அளவில் விலை குறைய வாய்ப்பில்லை. ஆக அவசியம் தேவை இருக்கும்பட்சத்தில் ஆபரணமாக வாங்கலாம் அப்படி இல்லாத பட்சத்தில் டிஜிட்டல், பியூச்சர் சந்தைகளில் முதலீடு செய்து வைக்கலாம். இது லாபகரமான ஒன்றாகவும் இருக்கும்.
Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.
மேற்கண்ட செய்திகள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது. இதன் அடிப்படையில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்.