உங்க குடும்பம் கஷ்டப்படக் கூடாதா? பணம் நிறைய சம்பாதிக்கும்போது செய்யக்கூடாத 5 தவறுகள்?

கை நிறைய சம்பாதிக்கும் போது ஒரு ராஜா போல வரும் வரும் நாம், காசு இல்லாத சமயத்தில் ஒரு யாசகன் போல் இருப்போம். கையில் காசு நிறைய புரளும்போது அதை எப்படி செலவு செய்வது என தெரியாமல், தாறுமாறாக செலவு செய்வோம். அதுவே இல்லாத சமயத்தில் ரூ.1-க்கு கூட கஷ்டப்படுவோம். மாதத் தொடக்கத்தில் சம்பளம் வாங்கியவுடன் கையில் காசு இருக்கும்போது மனதிற்கு பிடித்ததை எல்லாம் யோசிக்காமல் வாங்கி விடுவோம். அதுவே மாத கடையில் அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இல்லாமல் திக்குமுக்காடி போவோம். இதுதான் இன்றைய நாளில் பலரின் உண்மை நிலையாக உள்ளது.

உலகின் பங்குச் சந்தையின் தந்தை என கூறப்படும் வாரன் பஃபெட் இதை மிக அழகாக கூறியிருப்பார். இன்று தேவையில்லாத பொருட்களை வாங்கிக் கொண்டே இருந்தால், ஒரு நாள் தேவையான பொருட்களை இழக்க நேரிடும். ஆம் இன்று கையில் காசு இருக்கிறது என்பதற்காக ஒன்றுக்கு இரண்டு மூன்று வாகனங்கள் வாங்குவோம். ஆனால் அதுவே பின்னாளில் சமாளிக்க முடியாமல் விற்பனை செய்து விடுவோம். கடைசியில் அத்தியாவசிய தேவைக்கு கூட தள்ளாடும் நிலை ஏற்படலாம். ஆக பணத்தை சம்பாதிப்பது பெரிய விஷயமல்ல, அதை சரியாக கையாளத் தெரிந்து கொள்வதும் அவசியமான ஒன்று.

பொதுவாக சமுதாயத்தில் மூன்று தரப்பு மக்கள் உள்ளனர். அவர்களில் முதல் வகை அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்படுபவர்கள். இன்று சம்பாதித்தால் தான், சாப்பாடு என்ற நிலையில் இருப்பவர்கள். இரண்டாவது பிரிவில் இருப்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். மூன்றாவது பிரிவில் நிறைய சம்பாதிப்பவர்கள். ஆடம்பரத்திற்காக நிறைய செலவுகளையும் செய்வார்கள். இதில் நீங்கள் எந்த பிரிவில் இருந்தாலும் சரி, இந்த கட்டுரை உங்களுக்கே சமர்ப்பணம்.

எல்லாம் போச்சு!

பலரும் 10 வருடத்திற்கு முன்பு நல்ல வருமானம் இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் போதிய திறன் இல்லை. ஆக அதை சரியாக சேமிக்கவில்லை. அதிக வருமானம் கிடைக்கும் என ஆசைப்பட்டு முதலீடு செய்தேன். அதுவும் போய் விட்டது.  வஙகி டெபாசிட் போன்ற திட்டங்களில் சேமிக்கவும் இல்லை. பிசினஸ் செய்து அதிக வருமானம் ஈட்டலாம் என முதலீடு செய்தேன். ஆனால் அதிலும் நஷ்டம் தான்.  நண்பர்களுடன் இணைந்து தொழில் செய்தேன். அதுவும் நஷ்டம் தான். யாரேனும் சரியான ஆலோசனை கூறியிருந்தால் அப்படி நடந்திருக்காது. என்ன செய்வது எல்லாம் இழந்தாயிற்று என வேதனையுடன் கூறுவதை கேட்டிருக்கலாம். அப்படி நீங்களும் உங்கள் குழந்தைகளிடம் புலம்ப கூடாது. கையில் அதிக பணம் புரளும் போது எந்த தவறுகளையும் செய்ய கூடாது என்பதை உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள்.  முதலில் அது என்னென்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

பணம் தான் முக்கியம்

இன்றைய காலகட்டத்தில் பணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எவ்வளவு முக்கியம் என்பதை வெறும் ஒரு வார்த்தையில் கூறி விட முடியாது. ஏனெனில் இது வாழ்வாதரம் என்பதை தாண்டி, உங்களுக்கான அங்கீகாரத்தை சமூகத்தில் நிர்ணயம் செய்யும் முக்கிய குறிகாட்டியாகவும் உள்ளது. ஆனால் நம்மில் எத்தனை பேர் அந்த பணத்தை சரியாக நிர்வகிக்க தெரிந்திருக்கிறோம், உண்மையில் பலருக்கும் பண நிர்வாகம் என்பதே  தெரிவதில்லை. எதற்கெல்லாம் செலவு செய்ய வேண்டும், எதற்கு செய்யக்கூடாது. எதில் முதலீடு செய்தால் பணத்தின் மதிப்பு அதிகரிக்கும்  எனத் தெரிவதில்லை. இதை பற்றி பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ கற்பிக்கப்படுவதும் இல்லை. பணத்தை பொறுத்த வரையில் அவரவர் அனுபவங்களே சிறந்த ஆசானாக இருக்கிறது.  

எனினும் துரதிஷ்டவசமாக பலரும் 40 – 50 வயதுகளில் கூட போதிய திறன் இல்லாமல் தான் இருக்கின்றனர். ஆனால் பணத்தில் நீங்கள் செய்யும் சிறு தவறுகள் கூட, உங்கள் குடும்பத்தினரையும் சேர்த்து பல ஆண்டுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆக கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் பற்றி பார்ப்போம். 

1.ஆட்டம் போடாதீங்க!

பணத்தின் முக்கியத்துவதை தெரிந்து கொண்ட நிலையில், அதை  எவ்வாறு சரியான முறையில்  திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் நல்ல சம்பாத்தியத்தை கொண்டுள்ளனர். ஆனால் அவற்றில் முதலீட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆக நல்ல  வருமானம் இருந்தாலும், வயதான காலகட்டத்தில் இன்னொருவர் கையை எதிர்பார்க்கும் சூழலிலேயே உள்ளனர்.

கையில் காசு இருக்கிறது என்ற தைரியத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போடுகின்றனர். சுற்றுலா, ஆடம்பர பொருட்கள், வீடு, கார், பங்களா என இஷ்டத்திற்கு செலவு செய்கிறார்கள். ஆனால் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொள்வதில்லை. குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வு காலத் திட்டமிடல் என எதையும் திட்டமிடுவதில்லை. அதன் பிறகு பின்னாளில் கஷ்டப்படுவர். கையில் காசு அதிகளவில் புரளும்போதே, முக்கிய தேவைகளுக்கு என ஒதுக்கீடு செய்து விட வேண்டும்.

2. முதலீட்டுக்கு ஏற்ற வருமானமா?

சிலர் கையில் சில லட்சம் சேர்ந்தாலே, இதில் முதலீடு செய்யலாமா, அதில் செய்யலாமா என பலரையும் விசாரிப்பார்கள். ஆனால் கடைசி வரையில் உருப்படியான ஒன்றில் செய்திருக்க மாட்டார்கள். சிலர் ஏதோ ஒரு பகுதியில் யாரோ சொன்னார்கல் என இடத்தை வாங்கி போடுவார்கள். ஆனால்  சில ஆண்டுகளுக்கு பிறகு அந்த இடம் எங்கே இருக்கிறது என்பது கூட தெரியாது. சிலருக்கு வாங்கினோமா என்பதே தெரியாமல் போய் விடுகிறது.

இன்னும் சிலர் கையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ள போது சரியான முதலீடுகளை தவிர்த்து, வீடு வாங்குவர். வீடு  வாங்குவது நல்ல விஷயம் தான் என்றாலும், அதை முதலீட்டு அடிப்படையில் வாங்குவது தவறு. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் அதற்கேற்ப வீட்டின் மூலம் வருமானம் கிடைக்குமா? வாடகை வருமானம் தான் குறைவு, அதன் மதிப்பு எத்தனை மடங்கு பெருகும் என்றால் அதுவும் மிகப்பெரிய கேள்வி தான். வீடு மட்டுமல்ல, இப்படி பலவாறான தவறுகளை செய்கின்றனர். ஆக ஒரு முதலீட்டை செய்யும்போது, அது உங்களுக்கு போதிய வருமானம் கொடுக்குமா, அதன் எதிர்கால மதிப்பு எப்படி இருக்கும் என்பதை கணக்கிட்டு செய்வதே சிறப்பு.

3. கண்ணுக்கு தெரியாத எதிரியை சமாளிக்கனும்!

பணவீக்கம் என்ற கண்களுக்கு தெரியாத எதிரியானவன், வருடத்திற்கு வருடம் நம் பணத்தின் மதிப்பை குறைத்து வருகின்றான். ஆக நீங்கள் செய்யக்கூடிய முதலீட்டு திட்டம் பணவீக்கத்தை தாண்டி வருமானம் தருமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பலரும் ரிஸ்க் எடுக்க மாட்டோம் என்று இன்னும் வங்கி பிக்சட் டெபாசிட்கள் அல்லது குறைந்த வருமானம் தரும் திட்டங்களை நாடுகின்றனர். இது பணவீக்கத்துக்கு இணையான வருமானம் என்றாலும், வரிக்கு பிந்தைய வருமானம் பணவீக்கத்தை காட்டிலும் குறைவாகவே இருக்கும். இது எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்காது. ஆக முதலீட்டுக்கு முன்பாக இதையும் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும்.

4. அதிக லாபமா வேண்டவே வேண்டாம்?

 உங்கள் கையில் பணம் இருக்கிறது என தெரிந்தால், உங்கள் வீட்டிற்கு தினசரி ஒரு விருந்தினராவது வருவார்கள். அதே உங்களிடன் பணம் இல்லை என்றால் ஒருவரும் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். சிலர் ஒரே வருடத்தில் இருமடங்கு லாபம் பார்க்கலாம்.  மூன்று மடங்காக லாபம் பார்க்கலாம் என ஆசை காட்டுவார்கள். பணத்தை வாங்குவதோடு சரி, அதன் பிறகு அவர்களை அந்த ஏரியாவிலேயே பார்க்க முடியாது.  அத்தோடு கொடுத்த பணத்தையும், உறவுகளையும் மறந்து விட வேண்டியது தான். ஆக பணம் இருக்கும் காலத்தில் பேராசை என்ற மாய வலையில் சிக்காமல் இருக்க வேண்டும்.

ஒரு சிலர் சரியான திட்டங்களில் முதலீடு செய்வர். ஆனால் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், ஒரே திட்டத்தில் எல்லா பணத்தையும் முடக்குவர். இதன் மூலம் லாபம் அதிகரித்தாலும் மிகப்பெரிய அளவில் இருக்கும். நஷ்டமானாலும் மிக மோசமானதாக இருக்கும்.  ஆக முதலீட்டை பொறுத்த வரையில் பிரித்து போர்ட்ஃபோலியோவை திட்டமிட வேண்டும். ஏதேனும் ஒரு பிரிவில் நஷ்டம் என்றாலும் அதை மற்றொரு பிரிவு மூலம் ஈடுகட்ட முடியும்.

5. எது சரியானது?

முதலீடு செய்யும் முன்பு எது சரியான திட்டம், அது உங்கள் இலக்கை அடைய போதுமானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பணவீக்கத்தை தாண்டி வருமானம் கொடுக்கும் திட்டங்கள் என்னென்ன, எந்த பிரிவில் முதலீடு செய்யப் போகிறீர்கள். அதன் எதிர்கால நிலை என்ன, பாதுகாப்பு தன்மை எப்படி இருக்கிறது. முதலீட்டு நிறுவனத்தின் பணப்புழக்கம் எவ்வளவு, அதன் பின்புலம் எப்படி என பலவற்றையும் ஆராய தெரிந்திருக்க வேண்டும்.

பலரும் கையில் பணம் அதிகம் புரளும்போது பிறகு பார்த்துக் கொள்ளலாம். அப்புறம் முதலீடு செய்து கொள்ளலாம் என நினைப்பர்.  எதிர்காலத்தில் எந்த ரூபத்தில் எப்போது பிரச்சனை வரும் என யாருக்கும் தெரியாது. ஆக திடீர் என ஏற்படும் பிரச்சனைகளையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், நிதி நிலையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *