How much benefit to take out a home loan with your spouse?
இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் வீட்டுக் கடன் வாங்கினாலும் பரவாயில்லை, ஆனால் சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் காணப்படுகிறது.
home loan, வீட்டுக் கடன்
Home Loan: நமது தாத்தா காலத்தில் எல்லாம் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார், எவ்வளவு சம்பாத்தியம், குணமுள்ள நல்ல பையனா என பார்த்து பார்த்து பெண் வீட்டார், தங்கள் பெண்ணை கட்டிக் கொடுக்க முடிவு செய்வார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அப்படியில்லை. மாப்பிள்ளைக்கு சொந்த வீடு இருக்கிறதா? எவ்வளவு சொத்து இருக்கிறது, வங்கியில் எவ்வளவு வைப்புத் தொகை இருக்கிறது, சொகுசாக வந்து செல்ல கார் இருக்கிறதா என கேட்கிறார்கள்.
பையன் நல்லவனா, பெண்ணை நன்றாக வைத்துக் கொள்வாரா என்ற நிலை மாறி, வேலை வாய்ப்பு, வருமானம், நல்ல வீடு, வாகனம் தான் ஒருவருக்கு பெண் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க உதவும் காரணிகளாக உள்ளன.
வீடு அவசியம்!
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு அவசியம் தான். அது எப்படி இருந்தாலும் சரி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் விலைவாசி உயர்வால் வீடு கட்டுவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. இத்தகைய சூழலில் வீடு வாங்குபவர்கள் கையில் பணத்தை வைத்துக் கொண்டு யாரும் வாங்குவதில்லை.
வீட்டுக் கடனை நம்பியே பலரும் திட்டமிடுகின்றனர். அதிலும் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் வீட்டு கடன் வாங்கினாலும் பரவாயில்லை, ஆனால் சொந்த வீடு வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் காணப்படுகிறது. ஆனால் திருமணத்திற்கு பின்பு வீடு வாங்குவதே சிறப்பு என நிபுணர்கள் கூறுகின்றனர். அது ஏன் என ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம், வாருங்கள்.
மனைவிக்கு பிடித்தமான வீடு!
ஒருவர் திருமணத்திற்கு முன்பு வீடு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அது வருக்கு பிடித்தமானதாகவும், அந்த சூழலில் அவரின் தேவை குறைவாகவே இருக்கும். ஆக அதற்கேற்ப ஒரு பெட்ரூம் உள்ள வீட்டையே திட்டமிடுவர். அதிகபட்சம் இரு பெட்ரூம் வீட்டை திட்டமிடலாம். ஆனால் அதே திருமணத்திற்கு பின்னர் எனும் போது மனைவி, குழந்தைகள் என இருக்கும்போது தேவை அதிகரிக்கும். ஆக அப்போது பெரிய வீடாக திட்டமிட வாய்ப்புகள் அதிகம். அதோடு மனைவிக்கு பிடித்ததை வாங்கிக் கொடுக்கலாம். இதனால் மனைவியும் ஹாப்பி. வாழ்க்கையும் ஹாப்பி.
மேலும் திருமணத்திற்கு முன்பாக சுற்று வட்டாரத்தை பற்றி பெரிதாக யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால் மனைவி குழந்தைகள் இருக்கும்போது, அருகில் பள்ளி, கல்லூரிகள் இருக்கிறதா, மருத்துவமனைகள் இருக்கிறதா, கடைகள் என சிறு சிறு அம்சங்களையும் கவனித்து வாங்குவார்கள்.
ஜாய்ண்ட் லோன் பெஸ்ட்!
பொதுவாக வீட்டுக் கடன் என்பது ஒருவரின் நிதி நிலையை பொறுத்தும், அவரின் முந்தைய பரிவர்த்தனைகளை பொறுத்தும் எவ்வளவு கொடுக்கலாம் என வங்கிகள் தீர்மானிக்கும். உதாரணத்திற்கு வீடு வாங்குபவரின் வருமானம் குறைவு அல்லது பரிவர்த்தனைகளில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில், குறைவான தொகையே வீட்டுக் கடனாக நிர்ணயம் செய்யப்படலாம்.
இதே கணவன், மனைவி என இருவரின் பெயரில் திட்டமிட்டால், இரு வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதனால் கடன் தொகையும் அதிகமாக கிடைக்கும். இது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சிறந்த வீட்டை கட்ட உதவிகரமாக இருக்கும். ஆக கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்குவது சிறப்பு.
வரிச் சலுகையும் கிடைக்கும்!
கணவன் , மனைவி இருவம் இணைந்து வீட்டுக் கடன் வாங்குவதன் மூலம் கடன் அதிகரிப்பதோடு மட்டும் அல்ல, தலா 2 லட்சம் ரூபாய் வரிச் சலுகையும் பெற முடியும். பிரிவு 24-ன் கீழ் ஆண்டுக்கு வட்டியில் 2 லட்சம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். ஆக கணவன் மனைவியாக இணைந்து திட்டமிடும்போது 4 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும். ஆக கடன் மட்டுமல்ல, சலுகையிலும் இருமடங்கு கிடைக்கும்.
வட்டியில் சலுகை
கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வீட்டுக் கடன் வாங்கும் போது, மனைவியை முதல் விண்ணப்பதாரர் ஆக சேர்த்தால் வட்டியிலும் சலுகை உண்டு. பல வங்கிகள் பெண்கள் பெயரில் வீட்டுக் கடன் வாங்கினால் வட்டியில் தள்ளுபடி கொடுக்கின்றன.
ஆக இருவரும் சேர்ந்து செயல்படும்போது கடன் வரம்பும் அதிகரிக்கும், வட்டியும் குறைவாக இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் அன்பான வாழ்க்கை துணைக்கு பிடித்தமான வீட்டை பார்த்து பார்த்து கட்டிக் கொடுக்க முடியும்.