Gold: சாமானியர் நிலை இனி கஷ்டம் தான்.. தங்கம் விலை குறித்து முக்கிய அப்டேட்!

Gold: தங்கம் விலையானது அவ்வப்போது குறைந்து வந்தாலும், நீண்ட கால அடிப்படையில் பார்க்கும்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது. இந்த போக்கு இனியும் தொடரலாம் என்ற நிலையே காணப்படுகிறது. ஆக விலை குறையும்போதெல்லாம் வாங்கி போடலாம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
சமீபத்திய நிலவரப்படி கனடா, மெக்சிகோ மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான 25% வரியை மார்ச் 4 முதல் நடைமுறைக்கு கொண்டு வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்தார். இதையடுத்து குறுகிய கால அழுத்தத்தில் இருந்து மீண்டு, தொடர்ந்து தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

டிரம்பின் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டிரம்ப் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும், வரி அதிகரிப்பு நடவடிக்கையை எடுப்பதாக கூறிய நிலையில், சீனாவில் தயாரிக்கப்படும் போதைப் பொருட்கள், வலி நிவாரணிகள் என்ற பெயரில் மெக்சிகோ, கனடா மூலம் அமெரிக்காவுக்குள் வருகின்றன. கடந்த ஆண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆக இதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியிருந்தார். மேலும் போதை பொருட்கள் விநியோகம் நிறுத்தப்படும் வரையில், புதிய வரி விதிப்பு தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதிகரிக்கும் பதற்றம்!

டிரம்பின் அடுத்தடுத்த அதிரடியான முடிவுகளால், அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக பதற்றம் அதிகரித்துள்ளது. சீனா மட்டுமே அல்ல கனடா உள்ளிட்ட நாடுகளும், அமெரிக்காவுக்கு எதிரான அறிவிப்புகளில் ஈடுபட்டுள்ளன. இது சர்வதேச அளவில் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். பதற்றத்தை அதிகரிக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது.

இதற்கிடையில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக விதிக்கும் நாடுகள் மீது, ஏப்ரல் 2, 2025 முதல் வரி விதிப்பு செய்யப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளது, இன்னும் பதற்றத்தை அதிகரிக்க வழிவகுக்கலாம். மேற்கண்ட பல்வேறு காரணிகளும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

பணவீக்கம் அதிகரிக்கும்!

அமெரிக்காவின் வரி செயல்பாடுகளுக்கு ,எதிராக மற்ற சர்வதேச நாடுகள் வரி அதிகரிப்பு செய்வதில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. இது சம்பந்தப்பட்ட நாடுகளில் மட்டும் அலாது, சர்வதேச அளவில் பணவீக்கம் மீண்டும் அதிகரிக்க காரணமாக அமையலாம். இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

தங்கம் விலை அதிகரிக்கலாம்!

தரகு நிறுவனங்கள் பலவும் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் வரி விதிப்பு முறையில் வரும் மாற்றங்கள், டாலர் மதிப்பில் நிலவி வரும் ஏற்ற இறக்கம், ரஷ்யா உகரைன் இடையேயான பிரச்சனை என பல சவால்கள் சந்தையில் இருந்து வருகின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

எனினும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையில் ஏதேனும் முன்னேற்றம் இருந்தால், அது தங்கம் விலை குறைய வழிவகுக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புக்கு தற்போதைக்கு இருப்பதாக தெரியவில்லை. ஆக தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தேவையான உதவியை செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளன. ஆக மேற்கொண்டு பதற்றம் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. ஆக முதலீட்டு ரீதியாக தங்கத்தின் தேவை அதிகரிக்கலாம்.

மேற்கண்ட காரணிகளுக்கு மத்தியில் தான், சர்வதே தரகு நிறுவனமான ஜேபி மார்கன், நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் தங்கம் விலை அவுன்ஸூக்கு 3,000 டாலர்களை எட்ட வாய்ப்பிருப்பதாக கணித்துள்ளது.

இந்திய நிலவரம் எப்படி?

இந்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளியின் அடிப்படை இறக்குமதி விலையை (Base Import Price) குறைத்துள்ளது. இது தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி செலவை கட்டுக்குள் வைக்க உதவலாம். இது ஆபரண சந்தையில் மேற்கொண்டு பெரிய அளவில் விலை அதிகரிப்பை தடுக்கலாம். தங்கம் விற்பனையையும் அதிகரிக்க உதவிகரமாக இருக்கலாம். எனினும் இதனால் பெரிய அளவில் விலை குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக அவசியம் வேண்டுமெனில் வாங்க திட்டமிடலாம். மாறாக பியூச்சர் சந்தை அல்லது டிஜிட்டல் தங்கத்தில் முதலீட்டை திட்டமிடுவதே சிறப்பாக இருக்கும்.

Disclaimer: All the above articles and news are published for informational purposes. It is important to plan with the advice of proper experts and not to make final decisions regarding investment or savings based on this. The management is not responsible for any such planning based on this.

முதலீடு செய்வதற்கு முன்பு செபி பதிவு முதலீட்டு ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்க வேண்டும். அதுவே லாபகரமான முதலீட்டுக்கு உதவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *